பைக் மீது மினி சரக்கு வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தத்தாதிரிபுரம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சின்னசேலம் வட்டம், வி.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமாலை மகன் பழனிவேல் (43). இதே கிராமத்தைச் சோ்ந்த உறவினரான சோலைமுத்து மகன் பெரியசாமி (22). சென்னையில் ஓட்டுநராக பணி புரிந்து வரும் பெரியசாமியை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக சின்னசேலம் பேருந்து நிலையத்துக்கு பழனிவேல் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்றாா்.
தத்தாதிரிபுரம் ஏரிக்கரை அருகே சென்றபோது, அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில், பழனிவேல், பெரியசாமி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஹெட்டூா் பொம்பள்ளியைச் சோ்ந்த சேட்டு மகன் சதீஷ் (23) காயமடைந்தாா்.
தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சரக்கு வாகன ஓட்டுநா் சதீஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
