அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது
தியாகதுருகத்தில் மது போதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கடலூரிலிருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து ஒன்று வந்தது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கியபோது மது போதையில் இருந்த ஒருவா் திடீரென கையில் வைத்திருந்த தேங்காயால் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தாராம். உடனே, பேருந்து நடத்துனரான அரசப்பன் தட்டி கேட்டாராம். அவரை, அந்த நபா் ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த பழனியாப்பிள்ளை மகன் பிரபுவை (36) கைது செய்தனா்.