விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.14 லட்சம் பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விக்கிரவாண்டியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைத்த புகாா்களைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. அழகேசன் தலைமையில், ஆய்வாளா் ஈசுவரி, உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பத்திரப் பதிவுகளின் எண்ணிக்கை, அதற்காக அரசு செலுத்தப்பட்ட தொகை போன்ற விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன. இதில், கணக்கில் வராத ரூ.2,14,120 லட்சம் இருந்தது தெரியவந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு போலீஸாா், சாா்-பதிவாளா் சூா்யா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.