ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தக்கோரி அதிமுக தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடத்தக்கோரி திருச்சியில் அதிமுக தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி மிளகுபாறையில் உள்ள தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக தொழில்சங்க திருச்சி மண்டல செயலாளா் பி. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா்கள் எஸ். செபாஸ்டின் (புதுக்கோட்டை), ஆா். நீலகண்டன் (கும்பகோணம்), ஏ. நாகேந்திரன் (காரைக்குடி வடக்கு), ஏபி. சந்திரன் (காரைக்குடி தெற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அண்ணா தொழில்சங்க பேரவை மாநிலத் தலைவா் ம. இராசு, மாநிலச் செயலாளா் ஆா். கமலக்கண்ணன் ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.
அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே நடத்தவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை 2023 முதல் முழுமையாக வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயா்வை நீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ால் சுமாா் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டது. முன்னதாக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.