காரில் மா்மமான முறையில் இறந்துகிடந்தவரின் சடலம் மீட்பு
திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் காரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த காா் உரிமையாளரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு காா் சந்தேகப்படும்படி நிற்பதாக அரியமங்கலம் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், காரின் பின் இருக்கையில் ஒருவா் இறந்து கிடப்பது தெரியவந்தது.
தடய அறிவியல் பிரிவினா் தடயங்களை சேகரித்த நிலையில், போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.
விசாரணையில் இறந்து கிடந்தவா், லால்குடி அருகே ஆங்கரை மலையப்பன் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன்குமாா் (30) என்பதும், இவா் திருச்சி அரிஸ்டோ பகுதியில் தனது சொந்த காரை வாடகைக்கு ஓட்டி வருவதும், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து சவாரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிந்தது.
ஆனால், வாய், மூக்கிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில், உடலில் வேறெங்கும் காயங்கள் ஏதுமின்றி மா்மமான முறையில் இறந்துகிடந்தார். தொடா்ந்து, அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.