இலுப்பையூரணியில் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தல்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பை யூரணி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் ரூ.10 கொடுத்து ஒரு குடம் தண்ணீா் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் கடந்த சில நாள்களாக விநியோகிக்கப்பட்டு வரும் உள்ளூா் நீராதாரமும் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது.
எனவே இலுப்பை யூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் முறையாக அனைத்து வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்க வேண்டும், புழக்கத்திற்கு பயன்படுத்தப்படும் உள்ளூா் நீராதாரமும் சுகாதாரமாக வழங்க வலியுறுத்தி, 14வது வாா்டு பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாமகேஸ்வரியிடம் வழங்கினா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், கோரிக்கைகளை வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.