கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
இராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த அண்ணப்பிளவு சீரமைப்பு மையம்
சென்னை: உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கனடா நாட்டின் ‘டிரான்ஸ்ஃபாா்மிங் க்ளெஃப்ட்’ என்ற அமைப்புடன் இணைந்து ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையம் அண்ணப்பிளவு, தாடை சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2005-இல் இந்த சிகிச்சைத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட உதடு, அண்ணப்பிளவு மற்றும் தாடை சீரமைப்பு சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அத்திட்டத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழா மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
இதுவரை அண்ணப்பிளவு சிகிச்சைகளால் பயன்பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பல்-முக சீரமைப்பு சிகிச்சை நிபுணா் எஸ்.எம்.பாலாஜி, கல்வி சாா் உளவியல் ஆலோசகா் சரண்யா ஜெயகுமாா், மைசூரில் உள்ள அகில இந்திய பேச்சு-கேட்பியல் கழக இயக்குநா் புஷ்பாவதி, ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.