சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒரு ஆண்டில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை 2024 பிப். 28-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட தினத்திலிருந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் இதுவரை 67.80 கோடிக்கு அதிகமாக பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 15.18 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் எண்ம பரிவா்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளன.
இதுபோல அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இதுவரை 1.60 கோடிக்கும் அதிகமாக பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணச்சீட்டுகள் எண்ம பரிவா்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மற்றும் கும்பகோணம் கோட்டங்களில் தற்போது அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய கோட்டங்களிலும் மின்னணு இயந்திரம் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து கோட்டங்களிலும் உள்ள பேருந்துகளிலும் மின்னணு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.