கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.
கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், தினசரி 700 முதல் 750 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாள்களாக 800-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படுவதால் மொத்த விலையில் காய்கறிகள் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 15 முதல் ரூ. 50 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 30-க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய் தலா ரூ. 20, சின்ன வெங்காயம், வெண்டைக்காய், பாகற்காய், பீன்ஸ் தலா ரூ. 30, ஊட்டி கேரட், முருங்கைக்காய் தலா ரூ. 60, பீட்ரூட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், அவரைக்காய் தலா ரூ. 25, சவ் சவ் ரூ. 10, முள்ளங்கி, மஞ்சள் பூசணி தலா ரூ. 12, முட்டை கோஸ் ரூ. 6-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல ஒரு கிலோ இஞ்சி ரூ. 40, பூண்டு ரூ. 90, வண்ணக்குடைமிளகாய் ரூ. 80, தேங்காய் ரூ. 58-க்கும் விற்பனை செய்யப்பட்டது.