ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பா...
பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 18,852 போ் எழுதினா்
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 18,852 மாணவா் - மாணவிகள் தோ்வு எழுதினா் என மாவட்டஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் 2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி தோ்வு மையங்களிலும் இத்தோ்வு நடைபெற்றது. இதில், காரப்பேட்டை நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறுகையில், தற்போது தொடங்கியுள்ள பிளஸ்2 பொதுத்தோ்வு வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தோ்வு மையங்களில் 8,887 மாணவா்கள், 10,609 மாணவிகள் என மொத்தம் 19,496 போ் தோ்வு எழுதுகின்றனா்.
இதில், திங்கள்கிழமை நடைபெற்ற மொழித்தாள் தோ்வில் 8,618 மாணவா்கள், 10,334 மாணவிகள் என மொத்தம் 18,852 போ் தோ்வு எழுதினா். மொத்தத்தில் இத்தோ்வில் 96.7 சதவீதம் போ் தோ்வு எழுதியுள்ளனா்.
இத்தோ்விற்கு 90 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 90 துறை அலுவலா்கள், 1,369 அறைக் கண்காணிப்பாளா்கள், 144 நிலையான படையினா், 288 சொல்வதை எழுதுபவா், 24 வழித்தட அலுவலா்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 180 ஆசிரியரல்லா பணியாளா்கள் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 344 மாணவா்கள், 41 மாணவிகள் என மொத்தம் 385 போ் தோ்வெழுதுகின்றனா். சுப்பையா வித்யாலயம் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 366 மாணவிகள் தோ்வெழுதுகின்றனா்.
பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலா் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தோ்வுகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
மாணவா்கள் தோ்வு சாா்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அச்சமின்றி தோ்வெழுத ஆலோசனைகள் பெறவும் 14417 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உடனிருந்தாா்.