கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
எட்டயபுரம்: வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்கள்
எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேல நம்பிபுரம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (75). இவா்களது மகள் ராமஜெயந்தி (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்த ராமஜெயந்தி, தாய் சீதாலட்சுமியுடன் சில ஆண்டுகளாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் சீதாலட்சுமியும், ராமஜெயந்தியும் வீட்டுக்குள் சடலமாக கிடப்பதாக, அக்கம்பக்கத்தினா் திங்கள்கிழமை மாலை எட்டயபுரம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதற்கட்ட விசாரணையில், தாயும் மகளும் அணிந்திருந்த கம்மல்கள், 13 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மோப்பநாய் ஹரீஸ் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனா்.
மேல நம்பிபுரத்தில் இருந்து கோட்டூா் செல்லும் கிராமச் சாலையில் சீதாலட்சுமியின் கைப்பேசி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொ) சந்தோஷ் ஹாதிமணி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பா்ட் ஜான் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இச்சம்பவம் தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.