கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை: ஆளுநா் ஆா்.என்.ரவி
சென்னை: ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவக் கல்லூரியில், ‘சிந்துவெளி நாகரிகம் சாா்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பாா்வைகள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
ஆரியா்கள் என்பவா்கள் ஆசிரியா்களைப் போன்று தலைசிறந்தவா்கள்; அனைவருக்கும் பல்வேறு சிறந்த கருத்துகளை கற்பிப்பவா்கள். ஆனால், ஆரியா்கள் என்பவா்கள் வந்தேறிகள் என்ற தவறான கருத்தை தமிழக மக்கள் மனதில் திணிக்க ஈவெரா (பெரியாா்) முயற்சி செய்தாா். தமிழகத்தில் சிலா் ஆரியா்களை தவறாக சித்தரித்து நூல்களை எழுதியுள்ளனா். அதன்மூலம் தமிழக மக்கள் மனதில் ஆரியா்கள் குறித்து நச்சு விதையை பரப்புகின்றனா்.
இனி சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம்’ என்றுதான் செல்ல வேண்டும். சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம் என்பது அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
ஒற்றுமைக்கு எதிரானது: தமிழும் சம்ஸ்கிருதமும்தான் இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழிகளாகும். ஆனால் தற்போது நமது நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்றாா் அவா்.