வளர்ப்பு பூனை இறந்த துக்கம்; இரண்டு நாள்கள் சடலத்துடன்... 3-வது நாளில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தை சேர்ந்த பூஜா என்ற பெண் திருமணமாகி இரண்டாண்டில் விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் தாயாருடன் வசித்து வந்தார். அவர் தனது தனிமையை போக்கிக்கொள்ள பூனை ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். எப்போதும் அந்த பூனையை தன்னுடன் வைத்திருந்தார். ஆனால் அந்த பூனை உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டது. இதையடுத்து பூஜா துக்கம் தாளாமல் கதறி அழுதார். இறந்த பூனையை புதைத்துவிடும் படி அவரது தாயார் தெரிவித்தார்.

ஆனால் பூனையை புதைக்காமல் பூனை மீண்டும் உயிரோடு வரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இறந்த பூனையை தன்னுடன் வைத்திருந்தார். உறவினர்கள் சொல்லியும் பூஜா கேட்கவில்லை. மிகவும் வருத்தத்தில் இருந்த பூஜா, பூனை இறந்த மூன்றாவது நாள்... மூன்றாவது மாடியில் இருந்த தனது வீட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மாலை 8 மணிக்கு அவரைப் பார்க்க அவரது தாயார் சென்றபோது பூஜா அங்கிருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார்.
இறந்த பூனை அவருக்கு அருகில் கிடந்தது. உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பூஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.