தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!
ஹைட்ரஜன் டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கிய டாடா மோட்டார்ஸ்!
புதுதில்லி: நீண்ட தூர போக்குவரத்து தீர்வுகளுக்கான ஹைட்ரஜனில் இயங்கும் கனரக டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கியது டாடா மோட்டார்ஸ். பல்வேறு எடையுடன் 16 மேம்பட்ட ஹைட்ரஜன் கம்பஷன் என்ஜின்களின் சோதனை ஓட்டம் 24 மாதங்கள் வரை நீடிக்கும் என்றது.
ஹைட்ரஜன் இன்ஜின்களான எச்2-ஐசிஇ மற்றும் எரிபொருள் செல் உள்ளடக்கிய எச்2-எப்சிஇவி தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த டிரக்குகள் மும்பை, புனே, புதுதில்லி-என்.சி.ஆர், சூரத், வதோதரா, ஜாம்ஷெட்பூர் மற்றும் கலிங்காநகர் உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான சரக்கு வழித்தடங்களில் சோதிக்கப்படும்.
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக் தெரிவித்ததாவது:
ஹைட்ரஜன் எரிபொருள், நீண்ட கால போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான தொழில்நுட்பமாக உள்ளதால் நாங்கள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகிறோம். இந்த தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்ள இந்த பரிசோதனை எங்களுக்கு உதவும் என்ற நிலையில், ஹைட்ரஜனை வணிகமயமாக்க தேவையான உள்கட்டமைப்பு தேவைகள் என்ன என்பதையும் நாங்கள் புரிந்து கொள்வோம் என்றார்.
மூன்று லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஹைட்ரஜன் எதிர்காலத்தின் எரிபொருள் என்றும், உமிழ்வைக் குறைப்பதன் மூலமும், எரிசக்தி தன்னம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்தியாவின் போக்குவரத்துத் துறையை மாற்றுவதற்கான மகத்தான ஆற்றலைக் பெறுவோம் என்றார்.