புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வழக்குகளைத் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

ஏற்கெனவே டூவிலர் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கண்காணித்தனர். திருட்டு நடந்த பகுதிகளில் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் 2 இளைஞர்களின் முகம் பல இடங்களில் பதிவாகியதைக் கண்டறிந்தனர். அதனடிப்படையில், கரூரைச் சேர்ந்த ஹரிஹரன்(23), பிரசாந்த்(19) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் தொடர்ச்சியாக டூவிலர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 9 புல்லட்கள் உள்பட 11 டூவிலர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்கள் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டமிட்டு டூவிலர்களை திருடி வந்துள்ளனர். ஏற்கெனவே இவர்கள் மீது டூவிலர் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக, இவர்கள் புல்லட் டூவிலர்களை மட்டுமே குறிபார்த்துத் திருடி வந்ததுள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, "இருவரும் தொடக்கத்தில் சிறிய டூவிலர்களை திருடி விற்றுள்ளனர். பிறகு புல்லட் டூவிலர் விலை உயர்ந்து டிமாண்ட் அதிகமானதைத் தொடர்ந்து புல்லட்களை குறிபார்த்துத் திருட தொடங்கியுள்ளனர். முதலில் வாகனங்கள் சென்று, இடங்களை நோட்டமிட்டு கொள்கின்றனர். எங்கு, எப்போது எடுக்கலாம் என்பது முடிவு செய்துவிட்டு, மிகவும் சாதாரணமாக டூவிலர்கள் திருடிச் சென்றிருக்கிறார்கள். தற்போது பறிமுதல் செய்த டூவிலர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த இளைஞர்களுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா, வேறெங்கும் டூவிலர்களை பதுக்கி வைத்துள்ளனரா என விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
