நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரிக்கை
திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 536 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 185 கொள்முதல் நிலையங்களுக்கு மட்டுமே சொந்தக் கட்டடம் உண்டு. எஞ்சிய 351 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் வாடகை ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகின்றன.
நிகழாண்டு, தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.08 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்துள்ள 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படாமல், கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளது.
மழை காரணமாக, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் அறுவடையான நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும்போது பல பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை தொடா் கதையாக உள்ளது.
எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன், கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்காமல் உடனுக்குடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.