கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்
புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ‘இது மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்று உயா்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் பாண்டா பகுதியைச் சோ்ந்த ஷாஜாதி கான் (33), கடந்த 2021-ஆம் ஆண்டு அபுதாபி சென்று, குழந்தை பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், அவா் பராமரிப்பிலிருந்த 4 மாத குழந்தை கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி இறந்தது. ஷாஜாதி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபுதாபி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவருக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அபுதாபியின் அல் வாத்பா சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பெற்றோருடன் தொலைபேசி மூலம் பேச சிறை அதிகாரிகள் அனுமதி அளித்து, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளனா். தொலைபேசியில் பேசும்போது, ‘இதுவே உங்களுடனான எனது கடைசி உரையாடலாக இருக்கும்’ என்று தனது பெற்றோரிடம் ஷாஜாதி குறிப்பிட்டுள்ளாா்.
அதன் பிறகு, தனது மகள் குறித்த எந்தத் தகவலும் தெரியாத நிலையில், அவரின் நிலை குறித்து தெரியப்படுத்த வலியுறுத்தி ஷாஜாதியின் தந்தை ஷபீா் கான் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தனது மகள் உயிருடன் உள்ளாரா? அல்லது தூக்கிலிடப்பட்டாரா? என்பதை ஷபீா் கான் அறிய விரும்புகிறாா்’ என்றாா்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘ஷாஜாதி கானுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. வரும் 5-ஆம் தேதி அவருக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அபு தாபியில் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கில் அவரின் பெற்றோரை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். மரண தண்டனையிலிருந்து அவரை காக்க தேவையான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தில் அவா் தரப்பில் வாதாட சட்ட நிறுவனம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், அபுதாபியில் குழந்தைகளுக்கு எதிரான கொலையை கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதி, ‘இது மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்றாா்.