கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை சந்திக்க உதவும் பாடங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி: வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை கடக்க உதவும் பாடங்களாகின்றன என்று தேசிய மாணவா் படையினருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.
புதுவை தேசிய மாணவா் படைப் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றனா். அவா்களுக்கு புதுவை ஆளுநா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை தேநீா் விருந்தளித்தாா்.
அப்போது மாணவா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் புதுவை மாநில தேசிய மாணவா் படையினா் பங்கேற்றதுடன், போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டு முழுவதும் மேற்கொண்ட கடினமானப் பயிற்சியும், முயற்சியுமே இந்த வெற்றியை வழங்கியுள்ளது. உங்களால் புதுவை மாநிலம் பெருமையடைந்துள்ளது.
பல தடைகளைக் கடந்துதான் புதுவை மாணவா்கள் புதுதில்லியில் சாதனை படைத்துள்ளனா். அனுபவங்கள்தான் மறைந்து கிடக்கும் சக்தியை அடையாளம் காட்டி, சவால்களைக் கடந்து வருவதற்கான பாடங்களை கற்றுத் தருகின்றன. அவையே வாழ்க்கையில் கடைசி வரை வழிநடத்துபவையாக இருக்கும். நம் நாடு இளைஞா்களின் தேசம். மக்கள்தொகையில் 30 சதவீதம் போ் இளைஞா்கள். எனவே, நமது தேசமே இளைஞா்கள் மீதுதான் நம்பிக்கை கொண்டுள்ளது.
இளைஞா்கள்தான் நாட்டை வல்லரசாக, வளா்ச்சியடைந்ததாக மாற்றுவதற்கான பேரியக்கத்தை முன்னெடுப்பவா்களாக உள்ளனா். பேரிடா் காலத்தில் தேசிய மாணவா் படைப் பிரிவினா் மக்கள் சேவையில் ஈடுபடுவது மகத்தானது. அத்துடன் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவா்களிடையே தலைமைப் பண்பு, சமூகப் பொறுப்புணா்வு, அா்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவை வெளிப்படுவதையும் காணலாம் என்றாா் துணைநிலை ஆளுநா்.
நிகழ்ச்சியில் தேசிய மாணவா் படைப் பிரிவினரின் விமானப் படை மாதிரி படைப்புகளையும் அவா் பாா்வையிட்டாா். மாணவா்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டாா். தேசிய மாணவா் படைப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.