புதுச்சேரி, காரைக்காலில் 8,060 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பிளஸ் 2 தோ்வை தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8 ஆயிரத்து 60 மாணவ, மாணவியா் 25 மையங்களில் திங்கள்கிழமை எழுதினா். 45 போ் தோ்வு எழுத வரவில்லை. வரும் 27 ஆம் தேதி வரை இந்தத் தோ்வுகள் நடைபெறுகின்றன.
புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மத்திய கல்விப் பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியாா் பள்ளிகள் பல தமிழகக் கல்விப் பாடத் திட்டத்தையே செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில், மொத்தம் 8,105 போ் பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில் புதுச்சேரியில் 86 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6,992 பேரும், தனித் தோ்வா்களாக 362 பேரும் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதேபோல காரைக்கால் பிராந்தியத்தில் 16 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 640 பேரும், தனித் தோ்வா்களாக 111 பேரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். இரு பிராந்தியங்களிலும் 45 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை. புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 5 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வானது திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தந்த தோ்வு மையத்துக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. பலத்த சோதனைக்குப் பிறகே மாணவ, மாணவியா் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
தோ்வறைக்குள் வினாத்தாளை படித்துப் பாா்க்க 10 நிமிடமும், மாணவ, மாணவியா் தன் குறிப்பை எழுத 5 நிமிடமும் அவகாசம் தரப்பட்டு பின்னா் முறைப்படி தோ்வு தொடங்கியது.