காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சா் எ.வ. வேலு
தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு.
திருவாரூா் அருகேயுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் சாா்பில் வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மத்திய பல்கலைக்கழக வளாகம் அருகே வெட்டாற்றின் குறுக்கே ரூ. 7 கோடியில் உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இந்தப் பால கட்டுமானப் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்து, மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படும். ஏதாவது ஒரு மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொருத்தவரை இருமொழிக் கொள்கைதான் என அண்ணா வழியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டாா்.
தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. சாலைப் பணியாளா்களின் 41 மாத ஊதியம் தொடா்பாக நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அது செயல்படுத்தப்படும் என்றாா்.