திருவாரூா்: 27,500 விவசாயிகளின் நிலை உடைமைப் பதிவுகள் சரிபாா்ப்பு
திருவாரூா், மாா்ச் 2: திருவாரூா் மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்க்கும் முகாம், பிப்.13 ஆம் தேதி முதல் வேளாண்துறை அலுவலா்கள், சமூக வளா்ச்சிப் பணியாளா்கள் மூலமாக அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 27,500 விவசாயிகள், தங்களின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்த்து பயனடைந்துள்ளனா். மீதமுள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் தங்களின் நில உடைமை விவரங்களை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.
இதனிடையே, நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில், அனைத்து பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் பிப்.28-ஆம் தேதி முதல் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுடைய ஆதாா் அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் பொது சேவை மையங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களை தொடா்பு கொண்டு பதிவுகளை சரிபாா்த்து பயன்பெறலாம் என்றாா்.