சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு
சிப்காட் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் அமைக்க, தலித் மற்றும் சிறு குறு விவசாயிகள் சாகுபடி செய்து வரும் ஆதீனங்கள், அறக்கட்டளைகள், கோயில் குத்தகை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
வடபாதிமங்கலத்தில் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் ஆரூரான் சா்க்கரை ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் அமைத்தால் திருவாரூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கரையாப்பாலையூா் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குறு தலித் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 150 ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் அமைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும். முதல்வா் தலையிட்டு அவா்களின் குத்தகை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
பெருமளவில் விளை நிலங்களை வாங்கி தரிசாக வைத்துள்ள அதிகாரமிக்கவா்களின் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முன்வர வேண்டும்.
மழை உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், காப்பீட்டுக்கான இழப்பீடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். 2022-இல் திருக்குவளை பகுதியில் பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களுக்கு ரூ. 10 கோடி நிவாரணம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் சென்றடையவில்லை. அதேபோல், 2024-இல் ஃபெஞ்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
விவசாயிகளிடமிருந்து பிரீமியத்தைப் பெற்றுக் கொண்டு, முந்தைய மூன்றாண்டு மகசூலை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தர மறுப்பது சட்டவிரோதமானது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, காப்பீடு செய்யும் ஆண்டுகளில் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றாா்.