நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் சீராக நடைபெற சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தெரிவித்தது:
டெல்டா பகுதியில் இன்னும் 30 சதவீதம் நெல் அறுவடை செய்யப்பட வேண்டியுள்ளது. இதனிடையே, கொள்முதல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாப்பாக வைக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக சாக்கு தட்டுப்பாட்டால் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன், கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்கும்படி அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், விவசாயிகளின் நெல்லை பாதுகாப்பது குறித்து எந்த விதமான அறிவிப்பும் இல்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாக்கு தட்டுப்பாட்டை விரைந்து அகற்றி, அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.