சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
`அரிய வகை விலங்கு இது' - கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து இன்ஸ்டாவில் `ரீல்ஸ்' - சிக்கிய இருவர்!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து `அரிய வகை விலங்கு' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து எச்சரித்துள்ளது, வனத்துறை.
வேலூர் மாவட்டம், அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த ரஜினி (45), அரவிந்தன் (28) ஆகியோர் அணில் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி சமைத்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோவாகப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் கீரிப்பிள்ளையை வனப் பகுதியிலிருந்து வேட்டையாடி அதனை அரிய வகை

விலங்கு எனக் கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தனர். ``இது எங்கும் கிடைக்காத வன விலங்கு. இதனை நாங்கள் ஜவ்வாது மலை பகுதியில் அலைந்து தேடி கண்டுபிடித்தோம்" என்று கூறி, வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர்கள், வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த நபர்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களைப் பெற இவ்வாறு செய்ததாகத் தெரிவித்து உள்ளனர். அவர்கள் பதிவிட்ட அந்த வீடியோவிற்கு பத்தாயிரம் லைக்ஸ்களைப் பெற்றதாகவும், மேலும் இன்ஸ்டாகிராமில் பிரபலம் அடைவதற்காக இவ்வாறு வீடியோ பதிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் வன அலுவலர் உத்தரவின் படி அந்த இரண்டு நபர்களுக்கு தலா ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 அபராதம் விதித்து அவர்களை எச்சரித்துள்ளனர் வனத்துறையினர். மேலும் இன்ஸ்டாகிராமில் அந்த நபர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட வேட்டையாடும் வீடியோக்களை நீக்கம் செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஒடுகத்தூர் வனச்சரவு அலுவலர், “வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி வனவிலங்கினை வேட்டையாடுதல் என்பது குற்றமாகும். எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.