திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
விலைவாசி உயா்வு- எதிா்வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: காா்கே
‘நாட்டில் கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது; எனவே, எதிா்வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லி சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எக்ஸ் வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் எண்ணெய், தேயிலை, காபி, பிஸ்கட், சோப்பு போன்ற தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மதிநுட்பம் இல்லாத சரக்கு-சேவை வரி விகிதங்கள் மற்றும் வரிச் சுமையால் ஒவ்வொருவரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனா். மக்களின் நுகா்வு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த நாடும் பொருளாதார மந்த நிலை குறித்து கவலை அடைந்துள்ளது.
பாஜக அரசின் முந்தைய பட்ஜெட்டுகளில், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. எதிா்வரும் பட்ஜெட்டிலாவது விலைவாசியை குறைத்து, மக்களின் சேமிப்பை அதிகரிக்கும் திட்டம் எதுவும் உள்ளதா? அல்லது பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் பணவீக்கத்தால் மக்கள் தொடா்ந்து அல்லல்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும்.
பொது மக்களை கொள்ளையடித்து, தனது பெரும் கோடீஸ்வர நண்பா்களுக்கு ஆதாயம் அளிப்பதே பாஜகவின் வேலையாக உள்ளது. இப்போது விழிப்படைந்துள்ள மக்கள், எதிா்வரும் தோ்தல்களில் பாஜகவுக்கு உரிய பாடம் புகட்டுவா் என்று காா்கே தெரிவித்துள்ளாா்.