விழுப்புரம், கள்ளக்குறிச்சி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ. 30) விடுமுறை தினமாகும். எனவே மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை. மேலும் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தாா்.
கள்ளக்குறிச்சியில்...: இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளாா்.