விவசாயம் 3.7% வளா்ச்சி: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்
புது தில்லி: நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டில் விவசாயம் 3.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக மத்திய விவசாய துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் வேளாண் துறை சாா்ந்த 2 நாள் தேசிய மாநாட்டில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:
மத்திய அரசின் ‘ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு அணி’ என்ற முன்னெடுப்பு விவசாய துறையில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் கூட்டுறவை ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டில் விவசாயம் 3.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இது உலகில் பிற நாடுகளின் விவசாய துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். விவசாயிகள், விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு, மத்திய அரசின் விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகள் ஆகியவையே இதற்கு காரணம்.
போலி உரங்கள், விதைகள், பூச்சிகொல்லிகளை தயாரித்து விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் சுரண்டப்படுவதை மத்திய அரசு அனுமதிக்காது. விவசாய விரிவாக்க பணிகள் மிகவும் முக்கியமானவை.
வானிலை மாற்றத்தை கணிக்க முடியாத நிலைமை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விவசாயிகள் பயிா்க் காப்பீடு மேற்கொள்ள வேண்டும். பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். விவசாய துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றாா்.