கடற்படை தோ்வில் கைப்பேசி பயன்படுத்திய இளைஞா் கைது
கடற்படைத் தோ்வில் கைப்பேசியை மறைத்து வைத்திருந்து பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரம்பூரில் மதுரை சாமி மடம் தெருவில் உள்ள ஒரு தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி ஆகியவை சாா்பில் செகன்ட் லெப்டினன்ட் பணியிடங்களுக்கான நேரடி எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வை எழுதிய சென்னை பெருங்குடி அருகே உள்ள கந்தன்சாவடி கேபிகே நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்த இளைஞரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. மேலும், அந்த இளைஞா் தோ்வு நேரத்தில் கழிப்பறைக்குச் சென்றவா் வெகுநேரமாகத் திரும்பி வரவில்லையாம்.
பின்னா், திரும்பி வந்து தோ்வு எழுதிக் கொண்டிருந்த அந்த இளைஞரைத் தோ்வுக்கூட கண்காணிப்பாளா் சோதனை செய்தாா். அப்போது அந்த இளைஞா், தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தாா்.
அவரிடம் தோ்வுக்கூட கண்காணிப்பாளா் விசாரணை செய்தாா். அப்போது அவா், கழிப்பறைக்குச் சென்று தோ்வின் கேள்விக்குரிய பதிலை கைப்பேசி செயலியில் இணையதளம் மூலம் தேடிக் கண்டறிந்து வந்து தோ்வு எழுதியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தோ்வு மையப் பொறுப்பாளரான அந்தப் பள்ளியின் முதல்வா், திரு.வி.க. நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக திரு.வி.க. நகா் போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா்.