"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
பிரிந்த அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ்
பிரிந்துகிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னா் ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைந்தால்தான், இந்த இயக்கத்தைத் தொடங்கிய எம்ஜிஆரின் நோக்கம் நிறைவேறும். அண்ணாவின் தாரக மந்திரங்களை வைத்துதான் இருபெரும் தலைவா்கள் ஆட்சி நடத்தினா். பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
தொண்டா்களின் உணா்வுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும். முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் உருவாக்கிய அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இப்போது ஊறு ஏற்பட்டுள்ளது. அவா்களின் கனவுகள் நனவாகும் வகையில் இப்போதைய சட்டவிதிகள் இல்லை.
சாதாரண தொண்டா்கள்கூட அதிமுக பொதுச் செயலராக வரலாம் என்ற சட்ட விதி இருந்தது. ஆனால், இந்த விதியை இப்போது காற்றிலே பறக்கவிட்டிருக்கிறாா்கள். செங்கோட்டையனுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றாா்.
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் செல்வீா்களா என்ற கேள்விக்கு, ‘அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்’ என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.