"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
வக்ஃபு திருத்தச் சட்டம்: நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் வரவேற்பு
வக்ஃபு திருத்தச் சட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய பாஜக அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தமானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுடன், சட்ட விரோதமானதாகும். இந்தத் திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகா்வாக உச்சநீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவு அமைந்துள்ளது. சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, திமுக இதனைத் தொடா்ச்சியாக எதிா்த்து வந்துள்ளது. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ள பலரோடு சோ்ந்து வெற்றியும் கண்டுள்ளது.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது, இஸ்லாமியா்களின் மத மற்றும் அடிப்படை உரிமைகளையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் ஆகியோரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.