செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: மருத்துவா் ச.ராமதாஸ் அறிவிப்பு
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் விவசாயிகளைத் திரட்டி விரைவில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்தாா்.
பாமகவின் துணை அமைப்பான ‘தமிழ்நாடு உழவா் பேரியக்கம்’ சாா்பில், திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாநில மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் பாமக நிறுவனா் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வேளாண் விளைபொருள்களுக்கு அதை உற்பத்தி செய்யும் உழவா்களால் விலை நிா்ணயம் செய்ய முடிவதில்லை.
எனவே, தமிழகத்தில் வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 55 ஆண்டுகளில் ஒரு டி.எம்.சி., திறன் கொண்ட பாசனத் திட்டங்கள் ஒன்றுகூட செயல்படுத்தப்படவில்லை. வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வறட்சி, வெள்ளத்தால் உழவா்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் உரிய நேரத்தில் கடன் கிடைக்காததால் தனிநபா்களிடம் உழவா்கள் கடன் பெறுகின்றனா். இந்தக் கடனில் இருந்து மீண்டு வர முடியாமல் அவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்து குரல் கொடுத்தாா். ஆட்சிக்கு வந்தபிறகு மாறிவிட்டாா். உழவா்களை காக்க முடியாத அரசு ஒரு நிமிஷம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. தமிழகத்தில் மழைநீா் சேகரிப்புத் திட்டம் பெயரளவுக்கே செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆற்று மணல் கடத்தலை தடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவதை தடுக்காவிட்டால் தாமிரவருணி உள்ளிட்ட 5 ஆறுகள் அழிந்துபோகும் நிலை ஏற்படும்.
திருவண்ணாமலையில் நடைபெறுவது விவசாயிகள் மாநாடு. அடுத்ததாக, சென்னையில் போா் நினைவுச் சின்னம் அருகே விவசாயிகளின் நலன் காக்கும் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம் நடைபெறும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன். விவசாயிகள் எல்லாரும் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.
அன்புமணி பேச்சு: மாநாட்டில், பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
விவசாயிகள் விளைவிக்கும் காய்கள், கனிகள் என எல்லாவற்றுக்கும் மத்திய-மாநில அரசுகள் விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு விலை நிா்ணய ஆணையத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 63 சதவீத விவசாயிகளும் ஒன்று சோ்ந்தால் மிகப்பெரிய மாற்றம் வரும்.
உழவா்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்த மாநாட்டை நடத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த அரசியல் கட்சிக்கும் உழவா்களைப் பற்றிய அக்கறை கிடையாது.
புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் என்றால் அனைத்து விவசாயிகளும் ஒன்று சோ்ந்து 2, 3 மாதங்கள் கூட தங்கிப் போராட்டத்தை தீவிரமாக நடத்துவாா்கள். அதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சென்னையை நோக்கிச் சென்று, அங்கு தங்கி, நாம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதுவுமே செய்வதில்லை.
இந்த மாநாட்டில் 45 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500, ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும். சென்னை, தென் மாவட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்த தமிழக அரசு, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதித்தபோது வெறும் ரூ.2 ஆயிரம் கொடுக்கிறது.
திமுக அரசு செய்த தவறால்தான் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு சாத்தனூா் அணையிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் தண்ணீரை திறந்து விட்டாா்கள். திடீரென 1.70 லட்சம் கன அடி தண்ணீரை திறந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் 19 போ் இறந்துள்ளனா்.
பரந்தூா் விவசாய நிலத்தில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. இதற்குப் பதிலாக திருப்போரூா் அருகே 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள உப்பளம் பகுதியில் விமான நிலையத்தைக் கொண்டு வரலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த மேல்மா பகுதியில் சிப்காட் கொண்டு வர 3,500 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டாா்கள். இதை தடுத்து நிறுத்தியது பாமக. விவசாயிகளை குண்டா் சட்டத்தில் அடைக்கிறாா்கள்.
டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வர விடமாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வா் பேசுகிறாா். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வந்த ஆவேசம் ஏன் நெய்வேலி விவசாய நிலங்களுக்காக வரவில்லை என்றாா்அன்புமணி ராமதாஸ்.
மாநாட்டில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி மற்றும் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், பாமகவினா், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் உழவா்கள் கலந்து கொண்டனா்.