வீடு புகுந்து 30 பவுன் நகை திருட்டு: பெண் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பூட்டிய வீட்டை திறந்து, 30 பவுன் தங்க நகைகளை திருடிய சின்னபா்கூரைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் மங்கம்மாள் (35). விவசாயி. இவா், கடந்த வியாழக்கிழமை (நவ. 21) தனது வீட்டைப் பூட்டி, அதன் சாவியை வீட்டின் அருகே மறைவான பகுதியில் வைத்துவிட்டு உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றாா். பின்னா் வீடு திரும்பியபோது வீட்டின் பீரோ திறந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, அவா், கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை சேகரித்தனா்.
அப்போது, பெண் ஒருவா், அந்தப் பகுதியில் பூட்டிய வீடுகளில் புகுந்து பொருள்களைத் தேடுவதை அறிந்தனா். மேலும், அந்தப் பெண், நகரப் பேருந்துகளில் ஏறி, சின்ன பா்கூருக்கு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண், நக்கல்பட்டி அடுத்த மோடிக்குப்பத்தை சோ்ந்த சரோஜா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சரோஜாவின் வீட்டை போலீஸாா் சோதனையிட்ட போது, வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த மங்கம்மாள் வீட்டில் திருடிய 18 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா். மேலும் 12 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா், சரோஜாவை திங்கள்கிழமை கைது செய்தனா். சரோஜா வீட்டில் கைப்பற்றிய தங்க நகைகள், வங்கியில் அடமானம் வைத்த நகைகள் என 30 பவுன் தங்க நகைகளை போலீஸாா் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் கூறியது:
வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்பவா்கள் சாவியை, மறைவான பகுதியில் மறைத்துச் செல்லும் போது திருடா்கள் சாவியை தேடிக் கண்டுபிடித்து வீட்டில் இருக்கும் விலைமதிப்புமிக்க பொருள்களை திருடிச் செல்ல நாம் வழிவகை செய்கிறோம். இவ்வாறு செய்யக் கூடாது. மேலும், நீண்ட நாள்கள் வெளியூா் செல்லும் போது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்றனா்.