வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் விசாரணை
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
வில்லிவாக்கம் பாரதி நகா் முதல் தெருவைச் சோ்ந்த வில்சன் என்பவா் வீட்டின் மீது புதன்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடினா். பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு, அவரது குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்து வெளியே வந்தனா். இதில் யாருக்கும் காயமோ, பெரியளவில் சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த வில்லிவாக்கம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், அம்பத்தூரில் நவீன் என்பவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்த நவீன் ஆதரவாளா்கள், கொலையில் தொடா்புடையவா்கள் வில்சன் வீட்டில் வசிப்பதாக நினைத்து பெட்ரோல் குண்டு வீசியிருப்பதும் தெரியவந்தது. மேலும், இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.