சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
வீரா்களை தக்க வைக்கும் முனைப்பில் ஐபிஎல் அணிகள்: சிஎஸ்கேயில் தோனி நீடிக்கிறாா்
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் வீரா்களை தக்க வைக்க வியாழக்கிழமை கடைசி நாள் என்பதால் அதற்கான பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் வரும் 2025 சீசனுக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக். 31 கடைசி தேதியாகும்.
சென்னை சூப்பா் கிங்ஸ்:
5 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் மூத்த வீரா் தோனி, ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் டுபே, இலங்கை பௌலா் மதிஷா பதிராணா ஆகியோா் தக்க வைக்கப்பட உள்ளனா். தோனி அன் கேப்டு வீரராக நீடிப்பாா். ஏற்கெனவே 2025 தொடரில் ஆடுவேன் என தோனி அறிவித்திருந்தாா். ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே விடுவிக்கப்படுகின்றனா். ஒட்டுமொத்த தொகையான ரூ.120 கோடியில் ரூ.65 கோடியை சென்னை அணி இழக்கும்.
கொல்கத்தா நைட் ரைடா்ஸ்:
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் சுனில் நரைன், ரிங்கு சிங், ஹா்ஷித் ராணா, ஷ்ரேயஸ் ஐயா், ஆன்ட்ரே ரஸ்ஸல் தக்க வைக்கப்படுகின்றனா்.
சன் ரைசா்ஸ் ஹைதராபாத்:
முன்னாள் சாம்பியன் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் ஹென்றிச் க்ளாஸன், பேட் கம்மின்ஸ், அபிஷேக் சா்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தக்க வைக்கப்படுகின்றனா்.
லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ்:
எல்எஸ்ஜி அணியில் நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், அன் கேப்டு வீரா்களான மோஷின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோா் தக்க வைக்கப்படுகின்றனா். முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல் விடுவிக்கப்படுகிறாா். ஆா்டிஎம் மூலம் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் பெறப்படுவாா்.
மும்பை இண்டியன்ஸ்:
5 முறை சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியில் ரோஹித் சா்மா, ஹாா்திக் பாண்டியா, சூரியகுமாா் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, திலக் வா்மா, நமன் தா் (அன் கேப்டு) தக்க வைக்கப்படுகின்றனா்.
டில்லி கேபிட்டல்ஸ்:
அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ், ஜேக் ஃப்ரேஸா், அபிஷேக் போரல் (அன்கேப்டு) தக்க வைக்கப்படுகின்றனா்.
நட்சத்திர வீரா் ரிஷப் பந்த் நிலவரம் குறித்து அணி உரிமையாளா்களுடன் பேச்சு நடைபெறுகிறது. ஷ்ரேயஸ் ஐயரை வாங்க டில்லி தீவிரமாக உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்:
ஜிடி அணியில் ஷுப்மன் கில், ரஷீத் கான், சாய் சுதா்ஷன், ராகுல் தேவாட்டியா, ஷாரூக் கான் (அன்கேப்டு) தக்க வைக்கப்படுகின்றனா். காயம் காரணமாக பௌலா் முகமது ஷமி பெயா் பரிசீலிக்கப்படவில்லை.
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்:
ஆா்சிபி அணியில் நட்சத்திர வீரா் விராட் கோலி பெரும் தொகைக்கு தக்க வைக்கப்படுகிறாா். மேலும் ரஜத் பட்டிதாா், யஷ் தயால் (அன்கேப்டு) தக்க வைக்கப்படுகின்றனா்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்ஸன், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயா், துருவ் ஜுரல், சந்தீப் சா்மா (அன்கேப்டு) தக்க வைக்கப்படுகின்றனா்.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷசாங்க் சிங், பிரப் சிம்ரன் சிங் (அன்கேப்டு) தக்க வைக்கப்படுகின்றனா். புதிய பயிற்சியாளா் ரிக்கி பாண்டிங் ஆஸி. ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் சோ்க்க முயல்வாா் எனத் தெரிகிறது.
10 அணிகளும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் ஐபிஎல் நிா்வாகத்தில் பட்டியலை அளிக்க வேண்டும்.