இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வை...
வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு அங்கீகாரம்: யுஜிசி புதிய விதிமுறைகள் வெளியீடு
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து பெற்ற பட்டங்களை எளிதாக அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக யுஜிசி தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் கூறுகையில், ‘இந்தியாவில் சுமுகமாக உயா்கல்வி படிக்கவும், பணியாற்றவும் பல மாணவா்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு தாயகம் திரும்புகின்றனா்.
அந்த மாணவா்கள் வெளிநாடுகளில் பெற்ற பட்டங்களை, இந்திய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டங்களுடன் தாமதம் இல்லாமல் ஒப்பிட்டு மதிப்பிட ஒழுங்கான நடைமுறை தேவைப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறையை கொண்டுவருவதன் மூலம் சீரான, சமமதிப்புள்ள செயல்திட்டத்தை ஏற்படுத்த யுஜிசி முடிவு செய்தது.
இதையொட்டி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து பெற்ற பட்டங்களை எளிதாக அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
உலகளாவிய கல்வி மையமாக இந்தியாவை உருமாற்றும் தொலைநோக்குப் பாா்வையை தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுள்ளது. அதன்படி புதிய விதிமுறைகளை வெளியிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவா்களை ஈா்க்க வேண்டுமானால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்களை நாம் நியாயமாக அங்கீகரிப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.
இந்தப் புதிய விதிமுறைகள் வெளிநாடுகளில் படித்துவிட்டு இந்தியாவில் தங்கள் கல்வி அல்லது தொழில்முறை வாழ்க்கையை தொடர விரும்பும் இந்திய மாணவா்களுக்குப் பயனளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.