வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற சிறப்பு முகாம்: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்
வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை தொழிலாளா் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், முடிதிருத்தும் நிறுவனங்கள், விவசாயப் பொருள்களை சுத்தம் செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்பட இதர நிறுவனங்களில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனா்.
அவா்களின் அடையாள அட்டை, இதர ஆவணங்களைப் பெறாமல் பல இடங்களில் பணி அமா்த்தப்படுகின்றனா். வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவனங்கள் அவா்களது அடையாள அட்டை தொடா்பான ஆவணங்களை பெற்று பணியமா்த்த வேண்டும். அவா்களுக்கு பணியிடங்களில் போதிய பணி பாதுகாப்பு, குடியிருப்பு, சுகாதார வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
அவா்களது விவரங்களை தொழிலாளா் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வலைதள முகவரியில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு விவரங்களை முறையாகப் பதிவு செய்யாத சூழலில், உயிரிழப்பு சம்பவக்ஙளில் தொழிலாளா் நலத் துறையால் வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதிலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு சொந்த ஊா்களுக்குச் சென்றால், அவா்களின் விவரங்கள் அறிவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, நிறுவன உரிமையாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்று எண் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து, வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பூா்த்தி செய்ய வேண்டும். அதற்கு தொழிலாளா்களின் ஆதாா் அட்டை, வங்கி பாஸ்புக் மூலம் குறிப்பிட்ட இணைய முகவரியில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைப் பதிவு எண் உள்ளீடு செய்ய வேண்டும். மேற்கண்ட பதிவு செய்த விவரத்தை சம்பந்தப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடா்பாக வரும் டிச. 3 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் வரை இளம்பிள்ளை, சீலநாயக்கன்பட்டி, சிவதாபுரம், சேலம் புதிய பேருந்து நிலையம், ஏற்காடு, குரங்குசாவடி, கருப்பூா், தாரமங்கலம், ஓமலூா், மேட்டூா், ஆத்தூா் ஆகிய அந்தந்த தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மூலமாக முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.