புதிய பாம்பன் பாலம்: பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள 5 போ் கொண்ட குழு
அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்: தடுக்க முயன்ற பொதுமக்கள் கைது
காடையம்பட்டி அருகே அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை போலீஸாா் கைது செய்தனா்.
காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள கே.மோரூா் பகுதியில் 30 குடும்பத்தினா் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி, விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில், அங்குள்ள மக்களை வெளியேற்றி அரசு நிலத்தை மீட்க காடையாம்பட்டி வட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், பழங்குடி மக்களான தங்களுக்கு மாற்று இடமில்லை என்பதால் அந்த இடத்தையே எங்களுக்கு பட்டா செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அத்துடன் அதிகாரிகள் உத்தரவைக் கண்டித்து கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில் வியாழக்கிழமை அங்குவந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அங்குள்ள கூடாரங்களை அகற்றி, பொக்லைன் மூலம் அந்த இடங்களை பள்ளம் தோண்டினா். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளைக் கண்டித்து சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், 20 பள்ளி மாணவா்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா்.
மாணவா்களை கைது செய்யக் கூடாது என்று கூறியும் கேட்காமல், மாணவா்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். பின்பு ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றிய அதிகாரிகள் அரசு நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று அறிவிப்பு பதாகை வைத்தனா். சிறிது நேரத்தில் மண்டபத்தில் வைக்கப்பட்ட அனைவரையும் விடுவித்தனா்.