ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்யும் யுக்திகள் அறிவேன்..! அஸ்வின் நம்பிக்கை!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நவ.22ஆம் தேதி பெர்த் ஆடுகளத்தில் இந்தியாவும் ஆஸி.யும் பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியினை விளையாடுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் டெஸ்ட்டில் 536 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 109 டெஸ்ட் போட்டிகளில் 9,685 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 56.97 ஆக இருக்கிறது.
டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு தலைசிறந்த வீரராக ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்.
2013-2014ஆம் ஆண்டு தொடரில் ஸ்மித்தை முதன்முதலாக போல்ட் ஆக்கியது அஸ்வின்தான். இதுவரை 3 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அன்றுமுதல் இருவருக்கும் போட்டி இருக்கிறது.
ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஸ்மித்
இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கினை குறித்து அஸ்வின் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:
சுழல்பந்துகளுக்கு எதிராக அற்புதமாக விளையாடுபவர் ஸ்மித். தனித்துவமான தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டுள்ளார். சுழலுக்கு மட்டுமல்ல வேகப் பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக விளையாடுவார்.
இதையும் படிக்க:பிச்சைக்காரர்களின் நம்பிக்கை..! இந்திய அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
இந்தமுறை ஸ்மித் சுழலுக்கு எதிராக நன்றாக தயாராகி வருவார். அதை நிறைவேற்றவும் நினைப்பார். தில்லி கேபிடல்ஸ், புணே அணிகளில் நான் அவரது பேட்டிங்கினை அருகில் இருந்து அவரது தயாரிப்புகளைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு என்ன விதமான பந்துகள் பிடிக்கும் பிடிக்காது என்பது நன்கு தெரியும்.
ஸ்மித் சிந்திக்கும் கிரிக்கெட்டர்
ஸ்மித் மிகவும் சிந்திக்கும் கிரிக்கெட்டர். நம்மை ஆதிக்கம் செலுத்த விரும்பக் கூடியவர். சில நேரங்களில் பந்துவீச்சாளராக நாம் ஒரு வீரர் எப்படி பயிற்சி செய்கிறார் எனப் பார்க்க வேண்டும். அதிலிருந்து அவர் நமது பந்துவீச்சில் அடிப்பாரா இல்லையா என்பதைக் கணிக்கலாம். பலமுறை ஸ்மித் விளையாடுவதை கவனித்துள்ளேன்.
இதையும் படிக்க: அடிப்படையை சரியாக செய்யுங்கள்..! ரோஹித், கோலிக்கு அறிவுரை வழங்கிய பிரட் லீ!
அவர் எப்படி பேட் செய்கிறார் என்பது தெரியும். இவ்வளவு காலமாக அவர் விளையாடியதை பார்த்துள்ளதால் அவரை ஆட்டமிழக்க செய்யும் வழிகளை கண்டுப்பிடித்துள்ளேன் என்றார்.