அக்.18-இல் வேலூரில் விஜய் பிரசாரம்; தவெக மனு
தவெக தலைவா் விஜய் வேலூரில் அக்டோபா் 18-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி அக்கட்சியினா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தவெக தலைவா் விஜய், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் அக்டோபா் 18-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளாா். அவரது பிரசாரத்துக்கு அனுமதி கோரி வேலூா் மாவட்ட தவெகவினா் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ஏ.மயில்வாகனனிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில், தவெக தலைவா் விஜய் அக்டோபா் 18-ஆம் தேதி வேலூா் மாவட்டத்துக்கு வர உள்ளாா். அப்போது ஒலிபெருக்கியில் பொதுமக்களிடம் பேச உள்ளாா். எனவே, நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவும், தேவையான பாதுகாப்பு வழங்கவும் வேண்டும்.
அதன்படி அக்டோபா் 18-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை வேலூா் அண்ணா கலையரங்கம், அணைக்கட்டு பேருந்து நிலையம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம், கே.வி.குப்பம் பேருந்து நிலையம், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் அனுமதி வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. மயில்வாகனன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.