அசைன்மென்ட் கொடுத்த அமித் ஷா; கலகத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்! - எடப்பாடி அவுட்... வேலுமணி இன்!
''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள் எல்லாம் வெடித்த காலத்தில், 'முதலமைச்சர் ரேஸில்' செங்கோட்டையன் பெயர்தான் முதலில் இருந்தது. அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு தடுத்ததில் எஸ்.பி. வேலுமணியின் பங்கு மிகமுக்கியமானது'' என அ.தி.மு.க-வின் சீனியர்கள், அப்போது பரபரத்தார்கள்.
''அதே செங்கோட்டையன், எடப்பாடிக்கு எதிராக இப்போது கொம்புசீவி விடப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் பக்கபலமாக இருப்பதும் வேலுமணிதான். ஆனால், அவர் இப்போது நிற்பது செங்கோட்டையனுக்குப் பின்னால்'' என்று செம 'ட்விஸ்ட்' கொடுக்கிறார்கள், அதே அ.தி.மு.க சீனியர்கள். காரணம்... 'இனி நானே முதல்வர்' என்று வேலுமணி காய்நகர்த்தல்களை ஆரம்பித்திருப்பதுதான் என்கிறார்கள்.
ஆட்டத்தை ஆரம்பித்த வேலுமணி!
“பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் 2026 தேர்தலில் கரை சேரமுடியும் என்று செங்கோட்டையனுக்கு முன்பே பேச ஆரம்பித்தவர், வேலுமணிதான். தன் நெருங்கிய வட்டங்களிலும் இதை அவர் கூறிவருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கத் தயாராக இல்லை. முதல்வராக இருந்தபோது எடப்பாடியின் பதவிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம், அவரைக் காப்பாற்றியதில் வேலுமணி உள்ளிட்ட 'கொங்கு பங்கு' மிகமிக முக்கியமானது. கவர்னராக இருந்தவர், உள்ளூர் சாமியார் என பலரையும் கையில் வைத்துக் கொண்டு, எடப்பாடியைக் காப்பாற்றிவிட்டுக் கொண்டிருந்தவர், வேலுமணிதான்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் சரிப்பட்டு வரவில்லை. ‘நாம பார்த்துப் பார்த்து பதவியைக் காப்பாத்திக் கொடுத்தோம். ஆனா, அந்தப் பழனிசாமி இப்ப நம்ம பேச்சை கேட்கறதில்ல’ என்று வேலுமணி அண்ட் கோ ஓப்பனாகவே குமுறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே... `முதலமைச்சர் கனவை நோக்கி வேலுமணி வேகமாக பயணித்து கொண்டிருப்பதுதான்' என்று சொல்லும் அந்த அ.தி.மு.க சீனியர்கள், அதற்கான காரண காரியங்களையும் எடுத்து வைக்கிறார்கள்.
துருப்புச்சீட்டு செங்கோட்டையன்!
''வேலுமணியின் வளர்ச்சியை உற்றுக் கவனித்தால்... அரசியலில் யாருக்குமே அவர் கடைசிவரை விசுவாசமாக இருந்ததில்லை என்பது புரியும். அவரை வளர்த்துவிட்ட கோவை, பேரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான கே.பி ராஜூ தொடங்கி சசிகலா வரை யாராக இருந்தாலும், தனக்கு ஒரு பாதிப்பு என்று வந்தால், எதிர்த்து நிற்க வேலுமணி ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனால், திரைமறைவில் இருந்துதான் இயங்குவார்.
அந்த வகையில், இப்போது பா.ஜ.க மூலமே எடப்பாடியை எதிர்த்து வருகிறார். அதற்கான துருப்புச்சீட்டுதான் செங்கோட்டையன்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்வது தொடர்பாக முடிவெடுப்பதை எடப்பாடி தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க, திடீரென செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் போன்ற தலைகளைச் சந்தித்தார்.

இதைப் பார்த்து மிரண்டு போய்த்தான், உடனடியாக வழிக்கு வந்தார் எடப்பாடி. அமித் ஷாவும் சென்னைக்கு வந்திறங்கி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதை அறிவித்தார். ஆனால், இன்றுவரையில் எடப்பாடிதான் முதலமைச்சர் என்று அமித் ஷா ஒருபோதும் வாயைத் திறக்கவே இல்லை. 'கூட்டணி ஆட்சி' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்டது, 'வேலுமணி ஆட்சி' என்பதைத்தான்'' என்று கண்சிமிட்டுகிறார்கள் அந்த சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அண்ணாமலையுடன் அண்டர்ஸ்டாண்டிங்!
செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி அமைத்திருந்தால், 30 சீட்கள் வென்றிருக்கும்’ என்றார். கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால்... 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே இதே டயலாக், வேலுமணியில் வாயிலிருந்து வந்துவிழுவதைக் கேட்கமுடியும்.
இத்தனைக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், ‘பா.ஜ.க-வுக்கு 3 சதவிகிதம் வாக்கு வங்கிதான் உள்ளது’ என்று கூறிக்கொண்டே இருந்தவர்தான், வேலுமணி.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்ததும் அப்படியே அந்தர் பல்டி அடித்தார். ‘நாடாளுன்றத் தேர்தலுடன் அ.தி.மு.க கரைந்துவிடும்’ என்று பிரசாரத்தில் அண்ணாமலை அனல் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தபோதும், அவர் போட்டியிட்ட கோவை தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு தேர்தல் பணிமனைகூட அமைக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்ததும் வேலுமணிதான் என்று ரத்தத்தின் ரத்தங்களே அப்போது கொந்தளித்தனர்.
பா.ஜ.க-வின் பாசவலை!
இதைப் பற்றி பேசும் கோவை அ.தி.மு.க-வினர் சிலர், ''வேலுமணி வெளியில் அ.தி.மு.க பற்றி பேசுவதெல்லாம் வேஷம். உள்ளுக்குள் அவருக்கு இருப்பது, பா.ஜ.க பாசம். அது, ரத்த பாசத்துக்கும் மேலானது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தன்னுடைய மகன் திருமணத்தின்போது மணமக்களை அண்ணாமலை காலில் விழ வைத்து ஆச்சர்யப்படுத்தினார். கூட்டணியில் இல்லாதபோதும், மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்கிறேன் பேர்வழி என்று இரண்டு தடவை அமித் ஷாவை சந்தித்தார், வேலுமணி.
வேலுமணியின் பா.ஜ.க பாசம்... அவராக ஏற்படுத்திக் கொண்டதல்ல... பா.ஜ.க-வே திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றுதான்அ.தி.மு.க-வை மொத்தமாக விழுங்கப் பார்க்கிறது, பா.ஜ.க. அதற்காகத்தான் படிப்படியாக காய்களை நகர்த்தி வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பழனிசாமிக்கு பவர் கிடைக்கவைத்து அமைதியாக வேடிக்கைப் பார்த்தது பா.ஜ.க. ஆனால், பழனிசாமி ஸ்ட்ராங்க்காக கட்சியில் காலூன்றிவிட்டார்.
இந்தப் பின்னணியில்தான், வேலுமணிக்கு 'பாசவலை' விரிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் வெறும் 1,000 வாக்குகள்தான் வித்தியாசம்.
இது, வேலுமணியின் சொந்தத் தொகுதி. இதிலிருந்தே பா.ஜ.க பாசத்தில் எந்த அளவுக்கு வேலுமணி ஊறிப்போயிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்'' என்றும் சொல்லும் அ.தி.மு.க-வினர், ''தற்போது செங்கோட்டையன் ஆரம்பித்திருக்கும் யுத்தத்தின் பின்னணியில் இருப்பதும் அதே பாசத்தில் வேலுமணி எடுத்து வைத்திருக்கும் அடுத்த அடிதான்'' என்கிறார்கள்.
ஒரு பக்கம், நிழல்....
மறுபக்கம், ஆப்பு!
''அண்மைக் காலமாக வேலுமணி – செங்கோட்டையன் இருவரும் நெருக்கமாகவே இருக்கிறார்கள். வேலுமணியின் தீவிர ஆதரவாளரும் மடத்துக்குளம் அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வுமான மகேந்திரனின் மகளுக்கும், செங்கோட்டையனின் பேரனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் நடைபெற முக்கிய காரணமே... வேலுமணிதான்.
அடுத்து, எடப்பாடியுடன் செங்கோட்டையன் உச்சக்கட்ட பனிப்போரில் இருக்கிறார் என்று தெரிந்தும்கூட தன் மகன் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு ஆகிய இரண்டுக்கும் வற்புறுத்தி செங்கோட்டையனைப் பங்கேற்க வைத்தார், வேலுமணி.
கோவை வடக்குத் தொகுதி அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வான அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெய்டு நடத்தியது. இவர், வேலுமணியின் ஆதரவாளர். அப்போது, ஓடோடி வந்து அம்மன் அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்தார், செங்கோட்டையன். அந்த நேரத்திலும் வேலுமணி – செங்கோட்டையன் இருவரும் நீண்டநேரம் உரையாடினார்கள்.
ஒருபக்கம் எடப்பாடியின் நிழல்போல வலம் வந்துகொண்டே, மறுபக்கம் அவருக்கு எதிராகவும் காய் நகர்த்துகிறார். அதற்கு செங்கோட்டையனை அஸ்திரமாகப் பயன்படுத்துகிறார். செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியில் தற்போது அமர வைக்கப்பட்டிருக்கும் மேட்டுப்பாளையம் தொகுதி அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வான ஏ.கே. செல்வராஜும், வேலுமணியின் ஆதரவாளர்தான். ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் ஆதரவாளர்களை உருவாக்கிவருகிறார் என்பது தனிக்கதை'' என்பவர்கள்,
'அடேங்கப்பா வேலுமணி!
''கடந்த ஜூலை மாதம் கோவையில் இருந்துதான் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தன்னுடைய பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால், அப்போது எதிர்பார்த்த அளவுக்குக்குக் கூட்டம் திரளவில்லை. உரிய ஏற்பாடுகள் செய்யாமல் வேலுமணிதான் சொதப்பினார் என்று தன்னுடைய அதிருப்தியை எடப்பாடி வெளிப்படையாகவே அப்போது, பதிவு செய்திருந்தார்.
அடுத்த 3 நாள்களுக்கு எடப்பாடி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறார். இதுவும் வேலுமணியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிதான். கடந்தமுறை தான் சொதப்பினார் என்றால், நேற்று செல்வபுரம் பகுதியில் இருந்துதான் எடப்பாடி பழனிசாமி பயணத்தை தொடங்கினார். அங்கு நடத்தப்பட்ட ரோட்ஷோவில் சுமார் 500 மக்கள் தான் இருந்தனர். மீண்டும் மீண்டும் வேலுமணி ஏற்பாடுகளை திட்டமிட்டு சொதப்புவதாக உள்ளூர் அ.தி.மு.க-வினர் குமுறுகின்றனர். அதேநேரத்தில் பாஜகவினரோ ‘அடேங்கப்பா’ வேலுமணி என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.
அது அமித் ஷாவின் அசைன்மென்ட்
'ஒன்றுபட்ட அ.தி.மு.க' என்பது செங்கோட்டையனின் கோரிக்கை அல்ல. அது முழுக்க முழுக்க அமித்ஷாவின் அசைன்மென்ட். ஒன்றுபட்ட அ.தி.மு.க மூலம் இந்தத் தடவை ஆட்சியைக் கைப்பற்றுவது... ஆட்சிக்கு வந்தபிறகு மொத்தமாகக் கட்சியைக் கைப்பற்றுவது என்பதுதான் பா.ஜ.க-வின் கணக்கு. அதற்கு மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் மூலம் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர். தடையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியைத் தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு வேலுமணியை கொண்டுவரவும் பா.ஜ.க ரெடியாகவே இருக்கிறது.
இப்போதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், டெல்லிக்கு அழைக்கப்பட்ட செங்கோட்டையனிடம், 'தைரியமாக இருங்கள். எந்தப் பிரச்னையாக இருந்தலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' தெம்பூட்டி அனுப்பியுள்ளாராம் அமித் ஷா'' என்கின்றனர்.
ம்... தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமோ!