'அண்ணாமலைக்கு வரவேற்பா?' - கொந்தளித்த BJP சீனியர்கள்! | Cyclone Fengal | Seeman ...
`அசைவ உணவு சாப்பிட விடாமல் காதலன் துன்புறுத்தல்?' - ஏர் இந்தியா பெண் பைலட் மும்பையில் தற்கொலை!
மும்பையில் ஏர் இந்தியாவில் பைலட்டாக இருந்தவர் சிருஷ்டி துலி (25). மும்பை மரோல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்த துலி டெல்லியை சேர்ந்த ஆதித்யா பண்டிட் (27) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் டெல்லியில் பைலட் பயிற்சியில் ஈடுபட்டபோது சந்தித்து காதலிக்க ஆரம்பித்தனர். துலி வேலை முடிந்து இரவுதான் வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன் அவரை சந்திக்க ஆதித்யா வந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து ஆதித்யா டெல்லி செல்வதாக கூறி புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் துலி அவருக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். உடனே ஆதித்யா விரைந்து துலி தங்கி இருந்த வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே தன்னிடம் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார் ஆதித்யா. உள்ளே துலி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு அந்தேரி செவன் ஹில் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் துலி தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது. துலியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
துலிக்கு கடந்த ஆண்டுதான் ஏர் இந்தியாவில் வேலை கிடைத்து மும்பைக்கு வந்திருந்தார். அதோடு அடிக்கடி இரவு நேரத்தில் துலியை பார்க்க ஆதித்யா வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும் துலியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்று வருவதாக இன்ஸ்பெக்டர் ஜிதேந்திரா தெரிவித்தார். துலியை ஆதித்யா கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோரக்பூரில் வசிக்கும் துலியின் உறவினரான விவேக்குமார் இது குறித்து கூறுகையில், ''ஆதித்யா துலியிடம் தவறுதலாக நடந்து கொண்டார்.
துலியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றார். பொது இடத்தில் துலியை ஆதித்யா அவமானப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். பார்ட்டி ஒன்றில் துலி அசைவ உணவு சாப்பிட்டதற்காக ஆதித்யா கடுமையாக கத்தி இருக்கிறார். அதோடு அதன் பிறகு அசைவ உணவு சாப்பிடவும் அனுமதிக்கவில்லை. நடுரோட்டில் துலியின் காரை ஆதித்யா சேதப்படுத்தி இருக்கிறார். அதோடு நடுரோட்டில் துலியை விட்டுச்சென்றுள்ளார். துலியை அவர் மிகவும் துன்புறுத்தினார். ஆனால் துலி ஆதித்யாவை மிகவும் காதலித்தார். துலிக்கு சாப்பாட்டில் ஏதோ மயக்க மருந்து கொடுத்து ஆதித்யா அவரை கொலை செய்திருக்கவேண்டும்.
துலியின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதை ஆதித்யா வழக்கமாக கொண்டிருந்தார். துலியை ஆதித்யா மிரட்டியதாக சந்தேகப்படுகிறோம். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வங்கி பரிவர்த்தனைகள் இருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் தெரிவிப்போம்'' என்றார். துலி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு தனது பெற்றோரிடம் போனில் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.
காதலன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு சென்ற பிறகுதான் விபரீத முடிவை எடுத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கோரக்ப்பூரில் முதல் பெண் பைலட்டாக கருதப்படும் துலி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கெளரவிக்கப்பட்டவர் ஆவார். துலியின் திடீர் தற்கொலை அவரது குடும்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.