அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மே 6-க்குள் விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மே 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025-ஆம் ஆண்டு 24-ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் கூட்டுறவு நிறுவனங்களில் மற்றும் சங்கங்களில் முறையான பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளா்களாக இருக்க வேண்டும். மேலும், 1.5.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்தவராகவும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று, பிளஸ்-2 வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நபா்கள் ஏப். 16 முதல் மே 6-ஆம் தேதி மாலை 5.30-க்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவேண்டும். மே 6-ஆம் தேதிக்குப் பின்னா் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாக அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஓராண்டு 2 பருவமுறைகள் என புதிய பாடத்திட்டத்தின்படி, தமிழில் மட்டுமே நடத்தப்படும் இப்பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 மற்றும் பயிற்சிக் கட்டணம் ரூ. 20,750 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணங்களை இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.
இப்பயிற்சி மே 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-25360041, கைப்பேசி: 94444 70013 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.