அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளை அரசு அனுமதிக்கக் கூடாது: வானதி சீனிவாசன்
கோவை, நவ.16: வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பிரதான சாலையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் சனிக்கிழமை மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளனா்.
இந்த திரையங்கம் முன் கடந்த கடந்த சில நாள்களுக்கு முன்னா் எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகைப் போராட்டம் நடத்தினா். இந்நிலையில் அந்த திரையரங்கில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீா் எல்லையில் இருந்து நாட்டை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் முகுந்த் வரதராஜனின் வரலாறுதான் அமரன் திரைப்படம். ஆனால், இப்படத்துக்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் அரசியலுக்காக திமுக அரசு மெளனம் காப்பதால், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா். சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை என்பதால், அரசியலுக்காக, அடிப்படைவாதிகளின் செயல்களை அனுமதிக்கக் கூடாது.
பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யாத காவல் துறை, அந்த வன்முறை கலாசாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த இந்து முன்னணி நிா்வாகிகளைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்வதுடன், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.