போலி ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்ததாக தனியாா் வங்கி அதிகாரிகள் 6 போ் மீது வழக்குப் பதிவு
போலி ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்ததாக தனியாா் வங்கி அதிகாரிகள் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்தவா் கேசவபாண்டியன்(34), தொழில் அதிபா். இவா், கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த வியாழக்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் நாமக்கல் மாவட்டத்தில் துணி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறேன். எனது தொழிலை விரிவுபடுத்த திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.10 கோடி மதிப்பிலான சொத்தை அடகு வைத்து ரூ.3 கோடி கடன் பெற்று இருந்தேன்.
இதன் தவணைத் தொகையை தவறாமல் கட்டி வந்த நிலையில், கரோனா காலகட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி வங்கி அதிகாரிகள் அரசு உத்தரவையும் மீறி என்னை வாராக் கடனாளியாக்கி போலி ஆவணங்களை உருவாக்கி உள்ளாா்கள்.
அந்த போலி ஆவணங்களில் எனது கையொப்பத்துடன், எனது பெற்றோா் மற்றும் சகோதரா்களின் கையொப்பங்களையும் போலியாக போட்டு உள்ளனா்.
அத்துடன், இந்த வங்கியின் கிளை கோவை மண்டலத்துக்குள் வருவதால் கோவை கடன் வசூல் தீா்ப்பாயத்தில் வங்கி அதிகாரிகள் என் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதன் மூலம் நீதிமன்றத்தையும் ஏமாற்றி எனது சொத்தை ஏலத்தில்விட்டு வங்கி செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளருக்கே அதை விற்று விட்டதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் தனியாா் வங்கி அதிகாரிகள் எஸ்.அரவிந்த், பி.குஞ்சிதபாதம், கே.கணேசன், மகாராஜா, ஜி.சுயம்புலிங்கராஜா, ராமன் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.