அன்னம் - கயல் - மருமகள் தொடர்களின் மகா சங்கமத்தில் இணையும் நடிகை மான்யா!
அன்னம் - கயல் - மருமகள் தொடர்களின் மகாசங்கமத்தில் வானத்தை போல நடிகை மான்யா இணையவுள்ளார்.
இவரின் வருகையால் மகாசங்கமத்தில் பல புதிய திருப்பங்கள் உண்டாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கவரும் வகையில், மகா சங்கமம் என்ற பெயரில் இரண்டு, மூன்று தொடர்களின் முன்னணி நடிகர் - நடிகைகள் ஒன்றாகத் திரையில் தோன்றுவார்கள்.
அந்தந்தத் தொடர்களின் கதைக்கு இடையூறு விளைவிக்காத வகையில், அந்தந்த பாத்திரங்களாகவே ஒன்றாக திரையில் தோன்றும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு, மகா சங்கமம் என்ற பெயரில் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
பெரும்பாலும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நடிகர் - நடிகைகள் ஒன்றாகத் தோன்றி நடிப்பதால், மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மகா சங்கமம் ஒளிபரப்பாகிறது. இதனால் மூன்று தொடர்களுக்கு உள்ள தனித்தனியான ரசிகர்களும் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். இதனால், தொடர்களுக்கான டிஆர்பி அதிகரிக்கிறது.
அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்னம், கயல் மற்றும் மருமகள் ஆகிய மூன்று மாலைநேர பிரைம் தொடர்களும் மகா சங்கமமாக இரவு 7 மணி முதல் 8.30 மணி முதல் ஒளிபரப்பாகிறது.
அன்னம் தொடரில் அபி நட்சத்திரா நாயகியாகவும் பரத் குமார் நாயகனாகவும் நடிக்கின்றனர். கயல் தொடரில் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மருமகள் தொடரில் கேப்ரியல்லா - ராகுல் ரவி நடிக்கின்றனர்.
இவர்களுடன் வானத்தை போல தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை மான்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
வானத்தை போல தொடருக்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் வேறு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது மகா சங்கமத்தில் நடிக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு அன்னம் - கயல் - மருமகள் தொடர்களின் மகா சங்கமம் ஏமாற்றத்தை அளிக்காது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிக்க | இதயம் தொடரில் நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!