குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாகவும், 300 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. தமிழகம் மட்டுமில்லாது நாட்டில் உள்ள 10 மாநிலங்களில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இத்திட்டத்தில் தமிழகம் தான் சிறந்துவிளங்குகிறது என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திட்டமிட்டே கடந்த ஒராண்டாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து தற்போது வரை விடுவிக்கப்பட வேண்டிய 1056 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
எதற்கெடுத்தாலும் செய்தித்தாளில் படித்தேன், டிவியில் பார்த்தேன் எனக் கூறும் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது தெரியாதா என்ற கேள்வி எழுகிறது. அப்போது அவர் என்ன மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா, ரெய்டு பயத்தால் பங்கருக்குள் பதுங்கி இருந்தாரா எனத் தெரியவில்லை. புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதியை ஒதுக்காமல் தமிழகத்தை வதைக்கும் பாஜகவோடு கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு துரோகம் செய்கிறார்.
பாஜக அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட தைரியமில்லை. அதைவிடுத்து ஒன்றிய அரசு மீது மக்கள் கோபமாக உள்ளதை மடைமாற்ற குறை சொல்லி அறிக்கை விடுகிறார். உண்மையான அக்கறை இருந்தால் அவர் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் திமுக அரசு மீது வீண் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.