அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு மற்றும் தலையில் காயம் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இவர் கோமாவிற்குச் சென்றுள்ளார்.
இந்த விபத்து குறித்து நீலமின் குடும்பத்தினருக்கு இரண்டு நாள்கள் கழித்து அதாவது பிப்ரவரி 16-ம் தேதி தான் தெரியவந்துள்ளது. அப்போதிருந்து நீலமின் குடும்பத்தினர் அமெரிக்கா விசாவிற்கு முயன்று வருகின்றனர். ஆனால், இன்னும் அவர்களுக்கு விசா கிட்டவில்லை.

இது குறித்து மகாராஷ்டிரா எம்.பி சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் மாணவியின் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரியுள்ளார்.
சம்பவம் குறித்து நீலமின் தந்தை கூறும்போது, ``நீலமிடம் கடைசியாக நாங்கள் பிப்ரவரி 12-ம் தேதி பேசினோம். இப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவரைக் காண செல்ல அமெரிக்கா விசா தேவைப்படுகிறது" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
மாணவியின் பெற்றோருக்கு விசா கிடைக்க உதவ மத்திய அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.