கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்
பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!
பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டில் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2024 வரையில் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் ஒரு தலைவர், ஒரு பதவி என்ற கொள்கை இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், அவரே தலைவராகத் தொடர்வார்.
பாஜகவின் மாநிலத் தலைவர்களில் 60 சதவிகிதத்தினரின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 12 மாநிலங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இன்னும் 6 மாநிலங்களில் நடத்தப்படவில்லை. இந்த 6 மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் குறித்த அறிவிப்பும் வெளிவரும்.
இதையும் படிக்க:கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்
மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர். இதனிடையே தமிழ்நாடு, கர்நாடகம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்வதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், குஜராத் மாநிலங்களில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பாஜகவின் தேசியத் தலைவரை நியமிப்பதில் அக்கட்சி கவனம் செலுத்தி வருகிறது.
விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இருவரையும் தேசியத் தலைவராக தேர்வு செய்ய பாஜக முயன்றதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிப்பதற்கும், பாஜக மூத்தத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.