சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றமா? - ரேகா குப்தா விளக்கம்!
டெல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்து பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றியதாக பாஜக மீது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இக்குற்றச்சாட்டை மறுத்து, விளக்கமளித்திருக்கிறார் டெல்லி முதல்வரான ரேகா குப்தா.
பாஜக தலைமையிலான புதிய அரசின் முதல் டெல்லி சட்டமன்றக் கூட்டத்தின்போது, இவ்விவகாரம் இரு கட்சியினரிடையே மோதலை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து தனது X தளத்தில் டெல்லி முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மியின் அதிஷி, தான் முதல்வராக இருந்தபோது அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் முதல்வர் நாற்காலிக்குப் பின்னால் காட்சிப்படுத்தப்பட்டதைப் புகைப்படத்துடன் பகிர்ந்து, தற்போதைய முதல்வரான ரேகா குப்தாவின் இருக்கைக்குப் பின், மகாத்மா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் உருவப்படங்கள் சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ளதையும், அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படம் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிக் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிஷி, "பாஜக-வின் தலித் விரோத மனப்பான்மை அனைவரும் அறிந்ததே. இன்று அவர்களது தலித் விரோத மனநிலை வெளிவருகிறது. டெல்லி அரசாங்கத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், இந்த இரு புகைப்படங்களையும் முதல்வர் அலுவலகத்திலிருந்து அகற்றியுள்ளது. பாஜக தலித் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி என்பதை இது காட்டுகிறது" எனக் கூறினார். அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதால், லட்சக்கணக்கான தலித் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக கெஜ்ரிவால் இவ்விவகாரத்துக்குக் குரல் கொடுத்தார். இக்குற்றச்சாட்டுக்குப் பின், அம்பேத்கரின் புகைப்படத்தை அருகிலுள்ள சுவரில் காட்சிப்படுத்தியதாக மற்றொரு படத்தை பாஜக வெளியிட்டது. மகாத்மா காந்தி, ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் முதல்வர் நாற்காலியின் பின்னால் வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களைப் பக்கத்துச் சுவர்களில் வைத்துள்ளதாக வீடியோ ஒன்றையும் பாஜக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சி அம்பேத்கர் மற்றும் பகத்சிங்க் புகைப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அவநம்பிக்கையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பாஜக எதிர்க்கட்சியினரை நிராகரித்தது. மேலும், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டைக் கடுமையாகச் சாடிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகக் குறிப்பிட்டார்.

"அரசாங்க தலைமையின் புகைப்படம் இடம்பெறக் கூடாதா? குடியரசுத் தலைவர் மற்றும் தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் வைக்கக் கூடாதா?" எனக் கேள்வி எழுப்பிய ரேகா குப்தா, ``எனது பணி மக்களுக்குப் பதிலளிப்பதே மற்றும் நான் இவர்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை. அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. வேறு இடத்தில் புகைப்படங்களை வைக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.