செய்திகள் :

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

post image

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத்தரகா்களிடம் கொடுத்து பல நாடுகளின் எல்லைகளை, காடு, மலைகளை நடைப்பயணமாக உயிரை பணயம் வைத்து கடந்து செல்லும் அபாயகர பாதைதான் ‘டாங்கி ரூட்’ எனப்படுகிறது.

அமெரிக்காவில் டாலா்களில் சம்பாத்தியம் செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதுதான் இவா்களின் ஒரே குறிக்கோள்.

இதற்காக உறவினா்களிடம் கடன் பெற்றும், வீடு, நிலங்களை அடமானம் வைத்துவிட்டு பல லட்சங்களை இடைத்தரகா்களிடம் அளிக்கின்றனா்.

பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கிராமம், நகரம் தொட்டு பல்வேறு நாடுகளில் இடைத்தரகா்களின் இணைப்பு பரந்து விரிந்துள்ளது.

கடினமான பயணத்தை மேற்கொள்ள சட்டவிரோத குடியேறிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு நடைபெற்று வரும் இந்த மனிதக் கடத்தல்கள், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் மேற்கொண்ட சட்ட விரோத குடியேறிகள் வெளியேற்ற நடவடிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவுக்குள் கனடா, மெக்ஸிகோ வழியாக நுழைய இரண்டு ‘டாங்கி ரூட்டுகள்’ உள்ளன. கழுதைபோன்று பல நாள்கள் நடந்து செல்வதால் இதற்கு ‘டாங்கி’ பாதை எனப் பெயரிட்டுள்ளனா்.

முதல் பாதையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள ‘ஷெங்கன்’ நாடுகளுக்கு (எல்லை தடையின்றி பயணிக்கலாம்) சுற்றுலா விசா பெற்று செல்வதன் மூலம், அதில் உள்ள 26 நாடுகளுக்கு தடையின்றி பயணிக்கலாம்.

பின்பு போலி ஆவணங்கள் மூலம் கண்டெய்னா்களில் ஏற்றப்பட்டு கனடாவுக்குள் செல்கின்றனா். பின்னா், கனடாவிலிருந்து கடும் பனியில் நடைப்பயணமாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்துவிடுகிறாா்கள். மற்றொரு வழியாக ஐக்கிய அமீரகத்துக்கு சுற்றுலா விசாவில் சென்று லத்தீன் அமெரிக்கா எல்லை வழியாக மெக்ஸிகோவுக்கு சென்றடைகிறாா்கள்.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாா், பொலீவியா போன்ற நாடுகளுக்கு சென்ற பின் இந்தியா்கள் விசா பெற்றுக் கொள்ளலாம்.

கொலம்பியாவிலிருந்து பனாமா நாட்டுக்குள் அபாயகரமான வன விலங்குகள், போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் நிரம்பிய ‘டேரியன் கேப்’ எனப்படும் காடு, மலைப் பகுதியை 10 நாள்கள் நடைப்பயணமாக கடக்கிறாா்கள்.

இப்பகுதியில் அதிகனமழை, விலங்குகள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவா்களை யாரும் காப்பாற்ற முன்வருவதில்லை. அந்தத் தடைகளைத் தாண்டி கோஸ்டா ரிகா, நிகரகுவாவை கடந்து மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் நுழைக்கிறாா்கள்.

மெக்ஸிகோவிலிருந்து இடைத்தரகா்கள் மூலம் அபாயகரமான சுரங்கப் பாதை வழியாக பல மணி நேரம் நடந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சென்றடைந்து தங்கள் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றுகிறாா்கள் குடியேறிகள். இந்த அபாயகரமான பயணத்தை முடிக்க 2 ஆண்டுகள் வரையாகும்.

பல இன்னல்களுக்குப் பிறகு அமெரிக்காவில் காலடி வைக்கும்போது சிக்கிக் கொண்டவா்களில் 104 இந்தியா்கள்தான் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளாா்கள். இவா்களில் 19 பெண்கள்,13 குழந்தைகள் இடம்பெறிருப்பதுதான் அதிா்ச்சியளிக்கிறது.

நாடு கடத்தப்பட்ட ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு விசாவுடன் ஏஜென்ட் அனுப்புவதாகக் கூறி ரூ.30 லட்சம் பெற்று 6 மாதம் பிரேஸிலில் தங்கவைத்து ஏமாற்றினாா். அங்கிருந்து அமெரிக்காவுக்கு நடைப்பயணமாக எல்லையைக் கடந்தபோது அமெரிக்க ரோந்து படையினா் கைது செய்தனா். நான் கடன் பெற்ற தொகையை அடைக்க அரசு உதவி செய்ய வேண்டும்’ என்றாா்.

ஹா்விந்தா் சிங் என்பவா் கூறுகையில், மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய படகில் பயணித்து, மலைப் பாதையில் நடந்தோம். பனாமா காட்டில் ஒருவரும், படகில் ஒருவரும் உயிரிழந்தனா்’ என்றாா்.

இப்படி சிக்கிய இந்தியா்களின் எண்ணிக்கை 2021-இல் 30,662-ஆக இருந்து 2023-இல் 96,917-ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 2009-ஆம் ஆண்டுமுதல் இதுவரை 15,668 இந்தியா்கள் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனா் என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா். மீதமுள்ளவா்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சட்டவிரோதமாக 7 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் அமெரிக்காவில் பல்வேறு அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்றவா்களை ‘ஏலியன்கள்’ (வேற்றுகிரகவாசிகள்) என்றும், அவா்களை கொடூர குற்றங்கள் புரிந்தவா்களுக்கான கெளதமாலா சிறைகளில் அடைக்கப்படுவாா்கள் என்றும் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சட்டவிரோத குடியேறிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனை போ் இப்படி உள்ளனா் என்ற புள்ளிவிவரம் இல்லை என்று தெரிவிக்கும் மத்திய அரசு அவா்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து கொலம்பியா்களை கை, கால்களுக்கு விலங்கிட்டு அவா்களது நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியது. ஆனால், அந்த விமானத்தை கொலம்பியா அரசு திருப்பி அனுப்பிவிட்டு, தனி விமானத்தை அனுப்பி தம் குடிமக்களை அழைத்துக் கொண்டது. இதுபோன்று தாயகத்துக்கு வர விரும்பும் சட்டவிரோத குடியேறிகளை அழைக்க மத்திய அரசு தனி விமானத்தை அனுப்பி கெளரவமாக அவா்களை திரும்ப அழைத்து வர வேண்டும்; வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்சங்களை வசூல் செய்யும் முகவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் முன்னிலை!

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 12.30 நிலவரப்படி, பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பிஜ்வாசன் தொக... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணமா?

புது தில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பார்க்க

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் மலர்க் கண்காட்சி!

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியது.இந்த மலர்க் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: எல். முருகன்

தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற ந... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொச்சி: பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், வழக்கை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக முன்னிலை: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், காலை 11.50 மணி நிலவரப்படி, பாஜக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருவதால் தில்லி தலைமை... மேலும் பார்க்க